மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்களும் கார்களும் அதிகமான அளவில் சேதமடைந்துள்ளன. இதற்காக வாகன உரிமையாளர்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வேலைக்கான கூலி எதுவும் இல்லாமல் இலவசமாக வாகனங்கள் பழுது பார்த்து தரப்படும் என்று அறிவித்துள்ளது.
இச்சலுகையானது இன்று முதல் 18 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.