நடிகை சோனா வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நடிகை சோனா மதுரவாயல் கிருஷ்ணா நகர் 28-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மாலை சோனா ஹைடன் தனது வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர்கள் 2 பேர், அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது சோனா சத்தம் போட்டதால் அந்த இருவரும் அவரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து மீண்டும் அவர்கள் சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சோனா, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மதுரவாயலைச் சேர்ந்த லோகேஷ் (27), சிவா (21) ஆகிய இருவரை இன்று கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.