ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் சமீபகாலமாக அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது . தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், “புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது” என்றார். அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.