வளசரவாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் போலி சான்றிதழ் மூலம் சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இரண்டு போலி மருத்துவர்கள் இருப்பதாக வந்த புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் மருத்துவ துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தனியார் மருத்துவமனை உரிமையாளர் சரவணனிடம் விசாரணை மேற்கொண்ட போது அகஸ்டின், பரதன் ஆகிய இருவர் போலி சான்றிதழ் மூலம் மருத்துவம் பார்த்து வந்ததும், அவர்களது மருத்துவ சான்றிதழ்களை சோதனை செய்த போது போலி மருத்துவ சான்றிதழ்கள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார் அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அகஸ்டின் கடந்த 2003 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயின்றதாகவும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும், போலி சான்று மூலம் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மற்றொருவரான பரதம் என்பவரிடம் விசாரித்தபோது, அவன் சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வரை சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ ஆணையத்தில் அனுமதி பெற்று இருந்ததாகவும், அதன்பின் அதனை புதுப்பிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
போலி மருத்துவர்கள் குறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளரிடம் விசாரனை நடத்தியபோது போலி மருத்துவர்கள் என தெரியாது என பதில் அளித்துள்ளார். விசாரணைக்கு பின் மருத்துவமனை மற்றும் அதன் உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும். குறிப்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தவறு செய்திருந்தால் மருத்துவ மனை உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் போலி மருத்துவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.