காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சியை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு (53). இவர் தனது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவு டாட்டா ஏசி வாகனத்தில் வந்த 2 பேர் பசுமாடுகளை வாகனத்தில் ஏற்ற முற்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த பாபு மாடுகளை திருடிச் செல்வதாக கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து பகுதி மக்கள் மாடுகளை திருட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மணிமங்கலம் பகுதியில் இருந்து திருடி வந்த 4 பசு மாடுகளுடன் டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் வெள்ளாம்பி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (28), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.