‘செல்பி’ எடுக்க முயன்ற போது கடலில் விழுந்து சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தந்தாடி கடற்கரைக்கு இளம் பெண்கள் சிலர் பொழுது போக்குவதற்காக நேற்று (ஜூன் 2) மாலை சென்று இருந்தனர்.
அவர்களில் செட்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ரத்தினம், கனக துர்கா மற்றும் ஒரு இளம் பெண் ஆகியோர் கடலில் இறங்கி செல்பி எடுத்துக் கொள்ள முயன்றனர்.
அப்போது வேகமாக வந்த அலை ஒன்று அவர்கள் மீது மோதி தள்ளிவிட்டது. இதனால் கால் தவறி கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று பேரையும் அங்கிருந்த மீனவர்கள் மீட்க முயன்றனர்.
மூன்று பெண்களில் ரத்தினம், கனகதுர்கா ஆகியோரை அலை இழுத்துச் சென்ற நிலையில் மற்றொரு பெண்ணை மட்டும் மீனவர்கள் உயிருடன் மீட்டனர்.
சகோதரிகள் இரண்டு பேரின் உடல்களும் சற்று நேரத்தில் கடலில் இருந்து மீட்கப்பட்டன.
இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.