இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டாம் வில்லியம்ஸ். 25 வயதான இவர், லிங்கன்ஷயரில் உள்ள பப் ஒன்றில் செஃப்பாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு விடுமுறை சம்பளமாக வெறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும், எந்தவொரு பலனும் கிடைக்காததால், கரப்பான் பூச்சிகளை எடுத்து, சமையல் செய்யும் அறைக்குள் விட்டுள்ளார். இதனை அறிந்த பப் நிர்வாகத்தினர், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு வாரியத்தை தொடர்புகொண்டு அவர்கள் உதவியுடன் பப்பை சுத்தம் செய்துள்ளனர்.
இவ்வாறு சுத்தம் செய்வதற்கு ரூபாய் 22 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பப் நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, வில்லியம்ஸிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், ஆஜராகாமல் இருந்த அவர், தான் செய்த தவறை எண்ணி வருந்துவதாக கூறினார். இவ்வாறு இருக்க, இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாம் வில்லியம்ஸ்-க்கு 17 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.