புணேவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது இந்திய தேசியக்கொடியை அவமதித்த உக்ரைன் பாடகி உமா சாந்தி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உக்ரைனின் பிரபல இசைக்குழுவான சாந்தி பீப்பிள்ஸின் முன்னணி பாடகி உமா சாந்தி. இக்குழுவின் இசைநிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம், புணேவின் முந்த்வாவில் உள்ள கிளப்பில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது உமா சாந்தி தனது இரு கைகளிலும் இந்திய தேசியக் கொடியை ஏந்தி நடனமாடினார். திடீரென இந்தக் கொடிகளை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர்களை நோக்கி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக கோரேகான் பார்க் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் பாடகி உமா சாந்தி, நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திக் மெரீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் விஷ்ணு தம்ஹானே கூறினார். இதே இசைக்குழு பெங்களூரு மற்றும் போபாலில் கடந்த வாரம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
கடந்த 2022 அக்டோபரில் நடந்த நிகழ்விற்குப் பிறகு புணேயில் இரண்டாவது நிகழ்ச்சியில் உமா சாந்தி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.