நாடாளுமன்ற அசம்பாவிதச் சம்பவத்துக்கு வேலையின்மையே முக்கியமான காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் நிகழ்ந்த அசம் பாவிதச் சம்பவம் குறித்து கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும். அதை அரசு மூடி மறைக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் பேசினால்தான் பல உண்மைகள் வெளி வரும். அரசே பேசி, தீர்வு கண்டால் உண்மைகள் மூடி மறைக்கப்படும்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் 4 மாநிலங்களைச் சேர்ந்தோராக உள்ளனர். அவர்கள் முக நூல் மூலம் அறிமுகமாகி, 6 மாதங்களாகத் திட்டமிட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டுப் பயிற்சியும் எடுத்துள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்களே தவிர எந்த அடுக்கு பாதுகாப்பும் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியவில்லையே. உளவுத் துறையை தாண்டி, மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரை தாண்டி, டெல்லி காவல்துறையைத் தாண்டி, நாடாளுமன்ற பாதுகாப்புத் துறையைத் தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பார்வையாளர்கள் அரங்கம் வரை சென்றுள்ளனர்.
மேலும், அங்கிருந்த பாதுகாவலர்களையும் மீறி அறைக்குள் குதித்து கண்ணீர் புகை குப்பியை வெடிக்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க மத்திய அரசினுடைய மோசமான நிர்வாகக் கோளாறு, பாதுகாப்புக் குறைபாடு, கவனக்குறைவையே காட்டுகிறது இதில் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைய வேண்டும். நாடாளுமன்ற அசம்பாவிதச் சம்பவத்துக்கு வேலையின்மையே முக்கியமான காரணம். இதை அரசு தீவிர கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.