தெலுங்கானா மாநிலத்தில் அரசின் 2 படுக்கை அறை கொண்ட இலவச தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஹைதராபாத் பாடசிங்காரம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது வீடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சரும், பாஜக மாநில தலைவருமான கிஷன் ரெட்டி தலைமையில் ஏராளமான பாஜகவினர் நேற்று காலை சம்ஷாபாத்திலிருந்து பாடசிங்காரம் பகுதிக்கு செல்ல முயன்றனர்.
போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கிஷன் ரெட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன அவருடன் பாஜகவினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து கிஷன் ரெட்டி கூறும்போது, “தெலங்கானாவில் ஆளும் கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த எவ்வித அனுமதியும் தேவை இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள், மாநில அரசின் திட்டங்களை பார்வையிடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. போலீஸாரின் இரட்டை வேட நாடகத்தை கண்டிக்கிறோம். ஏழைகளுக்கு வீடு கட்டி தருகிறோம் என கூறி நாடகமாடும் முதல்வர் சந்திரசேகர ராவையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.
இதனை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். பல பகுதிகளில் சுற்றி இறுதியில் நேற்று மதியம் நாம்பல்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் அவர் இறக்கிவிடப்பட்டார்.