இந்தியாவின் ஜனநாயக பெருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19-ல் தேதி அன்று தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி அன்று, 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்கான முடிவுகள், கடந்த 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களில், பாஜக வெறும் 240 இடங்களில் மட்டும் வென்றிருந்தது.
ஆனால், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, 293 இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றின. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டும் தான், பாஜகவின் தலைமையில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவானது.
மேலும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, அமைச்சர் பதவியை வழங்க வேண்டிய கட்டாயத்தில், பாஜக தள்ளப்பட்டது. இந்நிலையில், எந்தெந்த கட்சிக்கு, எந்தெந்த அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கு ஒரு அமைச்சர் பதவி மற்றும் இணை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.
மேலும், பிரபுல் படேல் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில், பிரபுல் படேல் அல்லது சுனில் தாட்கரே அமைச்சராகக் கூடும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி, 3 முதல் 4 கேபினெட் அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது.
உள்துறை, பாதுகாப்பு இலாக்காக்களுடன் நிதித்துறை இணை அமைச்சர் பதவியையும் தெலுங்கு தேசம் கட்சி கேட்டுள்ளதாக, சொல்லப்படுகிறது. 5 இடங்களில் வென்றுள்ள லோக் ஜனசக்தி கட்சிக்கும், அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.