உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் மதுர் குப்தா. இவருக்கு பிரின்ஸ் குப்தா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், தனது தந்தையை பார்ப்பதற்காக, கடந்த சனிக்கிழமை இரவு அன்று, பிரின்ஸ் குப்தா வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே, பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. .
இதனால் கடும் கோபம் அடைந்த பிரின்ஸ், கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி, தனது தந்தையை கொலை செய்துள்ளார். பின்னர், குற்றத்தை மறைப்பதற்காக, உடலை துண்டு துண்டாக வெட்டிய அவர், அதனை சூட் கேஸ் ஒன்றில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திவிட்டார்.
தான் செய்த குற்றம் யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது தான், மதுர் குப்தாவின் தம்பி பிரசாந்த் குப்தா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “என்னுடைய அண்ணனின் மகன் பிரின்ஸ் குப்தா, அவருடைய வீட்டில் இருந்து பரபரப்பாக கிளம்பினார்.
அப்போது, நான் என் அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்தேன். அங்கு ரத்தம் சிதறிக் கிடந்தது. இதையடுத்து, பிரின்ஸ் என் அண்ணனை கொலை செய்துள்ளான் என்பது அறிய முடிகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், பிரின்ஸை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நடந்த அனைத்தையும், அவர் ஒப்புக் கொண்டார். மேலும், “என் தந்தை தன்னிடம் வைத்திருந்த பணத்தை, எனக்கு தரவில்லை.. அதை அவர் கொடுத்திருந்தால், நான் அவரை கொலை செய்திருக்க மாட்டேன்” என்று வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.