உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் உள்ள ஜிலாஹி ரயில் நிலையம் வழியாக, சண்டிகர் – டீப்ருகர் விரைவு ரயில் சென்றுள்ளது. அப்போது ஏற்பட்ட பழுதின் காரணமாக, பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது.
இந்த கொடூர விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, வடகிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான பங்கஜ் சிங் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “ரயில்வேயின் மருத்துவ வாகனம், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. மேலும், மீட்பு பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது. உதவி எண்களும் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம், இன்று மதியம் 2.37 மணிக்கு நடந்திருக்கிறது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில், 4-ல் இருந்து 5 கோச்சுகள் தடம் புரண்டுள்ளது. எவ்வளவு வேகத்தில் முடியும் அவ்வளவு வேகத்தில், மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்பது தான், தற்போது எங்களது முதன்மை பணியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.