அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹேஸ் பகுதியை சேர்ந்தவர் கால்பி டிரிக்கில். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது மனைவி கிறிஸ்டன், துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக கூறினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிறிஸ்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின்போது, கால்பியின் மீது தான், காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். ஆனால், கிறிஸ்டன் தற்கொலை தான் செய்துக் கொண்டார் என்று பிரேத பரிசோதனை ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினரால், கல்பி விடுவிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், அவர் மீது சந்தேகம் இருந்ததால், அவருக்கே தெரியாமல், மறைமுகமாக காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்க, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, காவல்துறையினருக்கு, இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான துருப்பு ஒன்று கிடைத்தது.
அது என்னவென்றால், கிறிஸ்டன் உயிரிழந்த பிறகு, அவரது கணவருக்கு ஒரு கோடி ரூபாய் அளவில் காப்பீடு பணம் கிடைத்துள்ளது. இந்த காப்பீடு பணத்தில், ரூபாய் ஒன்றரை லட்சத்தை பயன்படுத்தி, அவர் முழு உருவ செக்ஸ் பொம்மை ஒன்றை விலைக் கொடுத்து வாங்கியுள்ளார்.
மனைவி உயிரிழந்த இரண்டே மாதங்களில், கணவர் இவ்வாறு செக்ஸ் பொம்மை வாங்கியிருந்தது, காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுமட்டுமின்றி, வீடியோ கேம்ஸ் வாங்குதல், கடனை திருப்பி அடைத்தல், இசைக் கருவிகள் வாங்குதல் என்று பல்வேறு விஷயங்களுக்காக, காப்பீடாக கிடைத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை, எட்டே மாதங்களில் செலவு செய்திருக்கிறார்.
இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீண்ட மாதங்களாக நடந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கால்பி-க்கு, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 50 வருடங்களுக்கு அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.