தக்காளி, பீன்ஸ், கேரட் விலை உயர்ந்து வருவதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பீன்ஸ், அவரைக்காய், பச்சை மிளகாய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்திருந்தது. குறிப்பாக பீன்ஸ் விலை கிலோவுக்கு 300 ரூபாய் வரையில் விற்பனை ஆகி இருந்தன.
இந்த நிலையில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகத்தில் உள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி விலை 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு 40 ரூபாய் வரையில் உயர்ந்து உள்ளன.
இது சில்லறை விற்பனையில் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது இதேபோல் வெங்காயத்தின் விலையும் கிலோவுக்கு 60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளன. கேரட் கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 50 ரூபாய்க்கும், சௌசௌ கிலோ ஐம்பது ரூபாய்க்கும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும், பச்சை காராமணி 70 ரூபாய்க்கும், புடலங்காய் 60 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 80 ரூபாய்க்கும், எலுமிச்சம்பழம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு குறைந்திருப்பதால் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்திருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.