சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். காதல் விவகாரத்தில் கோகுல் ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்தத் தீா்ப்பை எதிா்த்து, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் வாழ் நாள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.