அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. இவர் இமாச்சலப் பிரசேதத்துக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றிருந்தார். பிப்ரவரி 4-ம் தேதி அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கார் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், நிலைத்தடுமாறிய கார் அங்கு ஆர்ப்பரித்து ஓடும் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நண்பரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் காணாமல் போனது.
இதையடுத்து, 8 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு சட்லெஜ் நதியின் அடியில் உள்ள ஒரு பாறையில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னைக்கு இன்று காலை புறப்பட்டது. இந்நிலையில், மாலை 4.00 மணியவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அவரது உடல் நந்தனம் சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெற்றியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு வெற்றியின் உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.