சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, பத்து தல படம் பார்ப்பதற்காக, நரிக்குறவர் இன மக்கள் சென்றனர். ஆனால், டிக்கெட் பரிசோதகர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்.
சாதியை காரணம் காட்டி, அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹப் ஆதி, நடிகர் சரத்குமார் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும், இந்த சம்பவம் குறித்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளார்.