தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் துணைவேந்தர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில உருது அகாடமி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழா, உருது மற்றும் தமிழ் மொழி அறிஞர்கள் கவுரவித்தல் மற்றும் கல்லூரி மாணவர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைபல்கலை. வளாகத்தில் நேற்று நடந்தது.
இவ்விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராகப் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. மதச்சார்பற்ற கொள்கையில் திமுக எப்போதும் உறுதியாகவே உள்ளது. பண்பாடு, அரசியல் நாகரீகம் கொண்டது திராவிட இயக்கம். நாடு என்பது ஒரு சமுதாயத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானது இல்லை.
அதேபோல், தமிழகத்தின் உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் துணைவேந்தர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். உயர்கல்வியின் நிர்வாகம் சீராக அமைய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உட்பட கல்வி நிலையங்களில் அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் இருக்கக் கூடாது. துணைவேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் சாதி, மதம், பேதம் பார்க்காமல் அவரவர் பணிகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.