காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில், 2-வது விமான நிலையத்தை அமைக்க அரசு முயற்சிகள் நடத்தி வருகிறது. இந்த விமான நிலைய பணிகளுக்காக, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்க உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடந்த 900 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் கிராம மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்க, நாளை அப்பகுதிக்கு செல்வதாக, த.வெ.க தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.
இந்த சந்திப்பு, பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாக, முதலில் தகவல் வெளியாகியிருந்தது. அப்பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், இந்த முடிவு என்றும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில், விஜய் மக்களை சந்திக்க உள்ளார். காலை 11 மணி முதல், 1 மணி வரை, விஜய் கேரவனில் இருந்தபடியே உரையாற்ற உள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு, இந்த முடிவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.