விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:
கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் கார்கே:
ஒரு சிறந்த நடிகராகவும் அரசியல் தலைவராகவும் தமிழக மக்களால் போற்றப்பட்டவர் விஜயகாந்த், அரசியல் அதிகாரத்தில் விஜயகாந்தின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா:
மாபெரும் கலைஞன், மக்கள் நாயகன், பொன் நெஞ்சம் கொண்ட மனிதரான ‘கேப்டன்’ விஜயகாந்த் என்றென்றும் மரியாதையுடனும், போற்றுதலுடனும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் நம்பிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்:
தேமுதிக கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்.
ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்:
விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:
“சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் அவரின் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி!” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி:
பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்:
தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்; அவருடைய குடும்பத்தினருக்கும் அக்கட்சியின் செயல் வீரர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:
“எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி:
விஜயகாந்த் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், தேமுதிக கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.
சி.பி.ஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்த விஜயகாந்த் தனது கடினமான உழைப்பால் திரைப்படத்துறையில் காலடி வைத்து படிப்படியாக உச்சத்தை எட்டியவர். பல திரைப்படங்களில் மக்கள் வாழ்நிலை முன்னேற்றத்திற்காக முற்போக்கு கருத்துக்களை பேசி நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர்.
நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அவரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு. நடிப்பு என்பதைத் தாண்டி சக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலுமே கேப்டனின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை, கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை ‘கேப்டன்’ அவர்களையே சாரும். வெள்ளி விழா கதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்க தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக, தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய ‘கேப்டன்’ அவர்களின் வாழ்க்கை, நம் எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிங்கமுத்து இரங்கல்
விஜயகாந்த் சிறந்த நடிகராகவும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்தவர். உதவி செய்வதில் அவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை அப்படி ஒரு நல்ல மனிதரை இன்று இழந்து விட்டோம். அவருடைய சிறப்பம்சமே மற்றவர்கள் சோதனையிலும் வேதனையிலும் இருக்கும்போது முதலில் நிற்பவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
நடிகர் ராமராஜ் இரங்கல்
நடிகர் சங்கம் தலைவராகவும்,எதிர் கட்சி தலைவராகவும் போன்ற பன்முக தலைவராக திகழ்ந்தவர். ஏழை எளிய மக்களுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் திகழ்ந்தவர். இனிய இவரைப் போன்ற ஒரு நல்ல மாமனிதர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய வேதனை தெரிவித்துக் கொள்கிறேன்.