தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்ற அனைவராலும், அன்போடு அழைக்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நேற்றைய தினம் மிகமுக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், தான் ஒப்புக் கொண்டுள்ள திரைப்படங்களை நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு, முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனை அறிந்த பொதுமக்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினர், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் மூழ்கினர். இது ஒரு புறம் இருந்தாலும், தீவிர சினிமா ரசிகர்களுக்கு, விஜயின் இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை தான் அளித்தது.
அதற்கு காரணம் என்னவென்றால், விஜய் மாதிரியான வெகுஜன நடிகர், சில முக்கிய இயக்குநர்களின் படங்களில் கடைசி வரை நடிக்க முடியாமல் ஆகியிருப்பது குறித்து, தங்களது ஏமாற்றங்கள் குறித்து கூறியிருந்தனர்.
அதாவது, நடிகர் விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில், திரைப்படம் உருவாக இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதுகுறித்து, இயக்குநர் வெற்றிமாறனே பல்வேறு பேட்டிகளில் கூறியும் இருந்தார். ஆனால், விஜயின் அரசியல் பிரவேசத்தால், இந்த கூட்டணி இணைய முடியாத சூழல் வந்துள்ளது.
இதேபோன்று, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ஒரு வித்தியாசமான திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி 2, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என்று பல முன்னணி மற்றும் தரமான இயக்குநர்களின் படங்களில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு, உண்மையான சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை தான் அளித்தது. அதற்கு காரணம் என்னவென்றால், என்னதான் கமர்ஷியல் படங்களில் மட்டும் விஜய் நடித்திருந்தாலும், அவர் ஒரு சிறந்த நடிகர்.
அவரால், கண்டென்ட் ஒரியண்டடான திரைப்படங்களிலும் நடிக்க முடியும் என்பதை, பலரும் பேட்டிகளில் கூறியுள்ளனர். ஆனால், அது நடக்காமல் போனது தான், பல்வேறு தரப்பினரின் ஏக்கமாக இருந்து வருகிறது.