தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். ஆனால், அரசியல் மீதான ஆர்வத்தின் காரணமாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி, தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும், மாநாடு நடத்துதல், கட்சியின் நிர்வாகிகளை நியமித்தல் என்று, கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் முயற்சியில், அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, தேர்தல் தொடர்பான பணிகளில், அவர் ஈடுபடப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், த.வெ.க-வில் இடம்பெற்றுள்ள அணிகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர்களுக்கான அணி, ஊடக அணி, பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் அணி, பயிற்சி மற்றும் பணி வளர்ச்சி அணி, உறுப்பினர் சேர்க்கை அணி, மாற்றுத்திறனாளிகளுக்கான அணி, இளைஞர் அணி, மாணவரணி, இளம்பெண்களுக்கான அணி, வணிகர்களுக்கான அணி, மீனவர்களுக்கான அணி, நெசவாளர்களுக்கான அணி, தொழிலாளர்களுக்கான அணி, குழந்தைகளுக்கான அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் அணி, காலநிலை ஆய்வு அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அணி, தொழில் முனைவோருக்கான அணி, என்று மொத்தமாக, 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், நேற்று விஜயை சந்தித்தார். அப்போது, தேர்தலை சந்திக்கும் வியூகங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்றும் இவர்கள் இரண்டு பேரும் சந்தித்துள்ளனர்.
அப்போது, 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தலை எப்படி வெற்றிகரமாக சந்திப்பது என்று பல்வேறு விவகாரங்களை, இந்த சந்திப்பில் அவர்கள் விவாதித்துள்ளார்களாம்.
குறிப்பாக, ஒரு வீட்டுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில், புதிய யுக்தியை விஜய் கையாள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த யுக்தி கைக் கொடுத்தால், முதல் தேர்தலிலேயே விஜயால், 2.25 கோடி வாக்குகளை கவர முடியும் என்று சொல்லப்படுகிறது.