வருகின்ற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்தி: அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்.15) சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், சனிக்கிழமை (செப்.16) 200 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று திங்கள்கிழமை (செப்.18) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப தேவைப்பட்டால் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.