சென்னையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலையில் இருந்து வலது புறமாக திரும்பி, ஆர்.கே. சாலை, வி.எம் தெரு வழியாக லஸ் சந்திப்பு, அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமண்ணா கார்டன் சந்திப்பு, சிபி ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீநிவாசா அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்ல வேண்டும்.
ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்புக்கு அருகில் வரும் போது ஜாம் பஜாரிலிருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கஃபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலை வழியாக திருப்பிவிடப்படும். ஊர்வலம் டி.எச்.சாலைக்குள் நுழையும் போது ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாகனங்கள் பெசன்ட் சாலை – காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜிஆர்ஹெச் சந்திப்பை நோக்கி திருப்பி விடப்படும்.
மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு – ஆர்.கே. மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும். லைட் ஹவுஸ் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள லூப் சாலையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும். விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவுக்கு எந்த வித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.