டிரினிடாட் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்திருந்தது.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்தனர். கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
விராட் கோலியின் 500-வது சர்வதேசப் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதமடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 206 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இது விராட் கோலியின் 29-வது சதமாகும்.
அதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் 25 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய பந்துவீச்சாளர் சொற்ப ரன்களில் வெளியேற, மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அரைசதம் அடித்தார்.
அவர் 56 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேற, இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் கெமர் ரோச், வாரிக்கான் தலா 3 விக்கெட்டுகளும், ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். சந்தர்பால் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து கிர்க் மெக்கென்சி களமிறங்கினார்.
இந்த நிலையில் 41 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 37 ரன்களுடனும் மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.