விருதுநகர் அருகே கூட்ட நெரிசலில் பேருந்து படிகட்டில் பயணம் செய்த 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்து ரெங்கையன்பட்டியில் உள்ள பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சக்திமாரி என்கிற மாணவி 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்த இவர் கடந்த 8-ஆம் தேதி வழக்கம் போல பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது அரசுப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அவர்களுடனே சக்திமாரியும் பயணித்துள்ளார். இதனிடையில் பேருந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் அப்பேருந்தின் முன்பகுதி படியில் நின்று கொண்டிருந்த மாணவி திடீரென பேருந்திலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதை கண்ட பேருந்திலிருந்த சக பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தியுள்ளனர், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் வழங்கியிருந்தாலும், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லுவோர் நேரத்தில் அதிக பேருந்துகள் விட வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளிடம் பயணிகள் புகார் விடுத்துள்ளனர்.