கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை நேற்று பிரச்சாரத்தின் போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கைபிரதமராக இருந்த டட்லி சேனநாயகவும் ரகசிய ஒப்பந்தம் போட்டனர். 1974 ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. எதற்காக கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை பெற்றுள்ளோம். முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சினையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி தற்போது வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) இரண்டாம் பகுதி வெளியாகும்போது, கருணாநிதி கச்சத்தீவுக்கு செய்த துரோகம் குறித்து பேசுவோம். கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.