நா தவறி வந்துவிட்டது: வருத்தம் தெரிவித்த தொல்.திருமாவளவன்

மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாற்றுத்திறனாளி சங்கதத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், திருமாவளவன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மேலவளவு போராளிகளின் நினைவு நாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் பேசுகையில், நான் எத்தனையோ திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு திருமண ஆசை இருக்காதா, நான் என்ன நொண்டியா – முடமா, இருப்பினும் அப்படி சொல்லக்கூடாது. எல்லோருக்கும் புரிய வேண்டும் என கூறினேன். நான் மக்களுக்காக என்னை ஒப்படைத்துள்ளேன் என பேசினார். இதற்கு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத்தின், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அஷ்ரப் வெளியிட்டுள்ள விடியோவில்; மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதற்கு எப்படி மனம் வந்தது. உங்கள் வீட்டில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் இப்படி பேசுவீர்களா?, எத்தனை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து, குழந்தைகளை படிக்க வைத்து, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண ஆசை வரக்கூடாதா, சமூக நீதி பேச்சாளராக உள்ள நீங்கள் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் இப்படி பேசலாமா?. தாங்கள் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை தங்களுக்கு எதிராக நடத்த வேண்டி இருக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக குரல் கொடுக்கிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஜூன் 30 ஆம் தேதி மேலவளவில் நடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும் வகையில், என்னை அறியாமல் ஓரிரு சொற்கள் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். எனது தவறுதலான பேச்சுக்கு வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும் என திருமாவளன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News