இந்தியாவில் தேசிய தலைநகர் மண்டலங்கள் என்ற பகுதி, இந்திய அரசாங்கத்தால், வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள், NCR என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள், இந்த NCR பகுதிகளில், காற்று மாசு அதிகப்படியான அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில், அதிக அளவிலான காற்று மாசு இருந்து வருகிறது.
இந்த காற்று மாசை கட்டுப்படுத்த, பி.எஸ் 5 என்ஜின்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் தான் NCR பகுதிகளில் அனுமதிக்கப்படும் என்றும், சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய காற்று மாசுவுக்கு, வாகனங்கள் பயன்பாடு மட்டுமின்றி, விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது காரணம் என்று கூறப்பட்டது. இதனை தடுத்து நிறுத்துவதற்கும் அரசு சார்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது, “விவசாய எச்சங்கள் எரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் எப்படி இதை செய்யப்போகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
அது உங்களுடைய வேலை. ஆனால், அது நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். எதையாவது செய்து விவசாய எச்சங்கள் எரிக்கப்படுவதை நிறுத்துங்கள்” என்று பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.கே.கால், “என் வாரவிடுமுறை அன்று, நான் பஞ்சாப் வழியாக பயனம் செய்திருந்தேன்.
பாதையின் இரண்டு பக்கங்களிலும், நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. உடனே, பக்கத்து மாநிலம் மீது, பழிசுமத்த நினைக்காதீர்கள். இது எதனால் நடக்கிறது. ஆனால், இது நிச்சயம் அரசியல் மோதல் காரணமாக மட்டும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், பஞ்சாப் மட்டுமின்றி, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இணைந்து, விவசாய எச்சங்கள் எரிக்கப்படுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர், நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.