சனாதன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ்-சை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ திருக்கோயில் ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து சமய அறநிலை துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 6 திருக்கோவில்களுக்கு காலை சென்று மாலை வரை சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், ஆடி மாதமும் இதே போன்று ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்ததாகவும் அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது தொடங்கிய ஆன்மீக சுற்றுலாவில் 62 பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், சனாதன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ்-சை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் அமைச்சர் கூறினார்.