Connect with us

Raj News Tamil

“மீண்டும் பிரதமராக வரப்போவது நரேந்திர மோடி தான்” – உறுதியாக சொன்ன நிர்மலா சீதாராமன்!

இந்தியா

“மீண்டும் பிரதமராக வரப்போவது நரேந்திர மோடி தான்” – உறுதியாக சொன்ன நிர்மலா சீதாராமன்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நிதியமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“3-ஆவது முறையாக ஆட்சி அமைக்க, பிரதமர் மோடி மிகவும் எளிமையான முறையில் வந்துக் கொண்டு இருக்கிறார். அடிமட்ட அளவில் உள்ள பேச்சு என்னவென்றால், நிலையான மற்றும் உறுதியான அரசாங்கம் வேண்டும் என்று பொதுமக்கள் ஆசைப்படுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி என்னென்ன கொண்டு வந்துள்ளார் என்பதை, பொதுமக்கள் பார்த்துள்ளார்கள்” என்று கூறினார்.

மேலும், “பொதுமக்களின் நோக்கம் என்ன என்பது மிகவும் தெளிவாக உள்ளது. வாக்கு செலுத்தும்போது, பெண்களும், இளைஞர்களும், பெரிய வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தினார்கள்.

அரசின் திட்டங்களின் மூலமாக நன்மைகள் பெற்றதை, அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள், அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை பார்க்காமல், அமலுக்கு கொண்டுவரும் திட்டங்களை மட்டும் தான் பார்ப்பார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து, முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுகிறது என்பதை, க்ரோனி முதலாளித்துவம் என்ற வார்த்தையின் மூலம், ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இவரது இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “இதனை கேட்கும்போது ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. ஆனால், இது வாக்காளர்களை கவரும் வகையிலான பேச்சு ஆகும்.

க்ரோனி முதலாளித்துவம் பற்றி யார் பேசுகிறார்கள்? காங்கிரஸ் கட்சியா? ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை, பின்னோக்கி பாருங்கள். க்ரோனி முதலாளித்துவம் என்பது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் முத்திரையாக இருந்தது” என்று சாடினார்.

“தனது கையில் ஆதாரம் இல்லாமல் பேசுவதில், ராகுல் காந்தி மிகவும் வல்லவர். கடந்த 2014-15 ல் இருந்து, இந்த விளையாட்டை அவர் தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார்” என்று விமர்சித்தார்.

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்பட்ட பணிகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “கனிம வள சட்டம் 2015-ன் பகுதியாக மாறியுள்ள மாவட்ட கனிம நிதி, பழங்குடியினர் வாழும் மாவட்டங்களுக்கு திருப்பி வழங்கப்படுகிறது. அந்த மாவட்டங்கள், தற்போது அந்த நிதியை பெற்று வருகின்றன.

இது பழங்குடியின மக்கள் வாழும் பகுதியை மேம்படுத்த உதவியாக இருக்கும். இவை அனைத்தும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது, இது நடக்கவில்லை” என்று விமர்சித்தார்.

காங்கிஸ் கட்சி மற்றும் அதன் இண்டியா கூட்டணியின் சமாதான அரசியல் குறித்து விமர்சித்த நிர்மலா சீதாராமன், மோடியின் கருத்துக்கள் குறித்த தனது விளக்கத்தையும், அந்த பேட்டியில் தொடர்ச்சியாக கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “மதத்தின் அடிப்படையில், நாட்டின் வளங்களை கொடுக்க விரும்பினால், அது Polarisation அல்லவா?. எக்ஸ்ரே செய்து, மக்களிடம் உள்ள வளங்கள் கணக்கிடப்பட்டு அவை மறுபகிர்வு செய்யப்படுவதை உறுதி செய்வதாக ராகுல் காந்தி கூறுகிறார். இதற்கு அரசியல் சாசனத்தில் அனுமதி உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

More in இந்தியா

To Top