அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு, OPS-ன் மகன், புகழேந்தி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன், ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த தீர்ப்பின் விளைவாக தான், இவர் ஆலோசனை நடத்துகிறாரா என்றும், கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நான் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை” என்றும், “தினமும் என்னை சந்திக்க 100, 200 பேர் வருவார்கள். அப்படியான சந்திப்பு தான் இது” என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இல்லை என்பதால், செங்கோட்டையன் கலந்துக் கொள்ளவில்லை. மேலும், அதிமுகவின் தலைமை மீது, செங்கோட்டையனுக்கு அதிருப்தி இருப்பதாகவும், தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.