திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார் அவரது மனைவி மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளான குமார், தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். போதிய அளவில் வருமானம் இல்லாததால் மிகவும் வறுமையில் வாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருந்து வந்ததுள்ளார். இவர்களது வறுமையை பற்றி ஒரு சிலர் அன்னை தெரசா என்கின்ற வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவை பார்த்த அனைவரும் உதவி தர முன்வந்த பின்னர், இன்று ஆரணி அருகே உள்ள ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில் தமிழ்ச்செல்விக்கு சிறப்பாக வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உதவ ஆளில்லாத மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகவும் பாராட்டை பெற்றது.