தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் இடையே ஒரு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. தமிழகத்தை ஆண்ட பல்வேறு தலைவர்களும், தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகித்த தலைவர்களும், சினிமாவில் இருந்து தான் வந்துள்ளனர்.
குறிப்பாக, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், முக்கிய ஆளுமைகளாகவே இருந்துள்ளனர். சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஒருசில சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியை துவங்கி, அதனை இழுத்து மூடிய கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இவ்வாறு இருக்கையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய், கடந்த பிப்ரவரி மாதம், முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்பதுதான் தன்னுடைய கட்சியின் பெயர் என்றும், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும் கூறியிருந்தார்.
இவ்வளவு பெரிய முடிவை, ஒரே நாளில் அறிவித்துவிட்டாரே விஜய் என்று, ஒருசிலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், அந்த சிந்தனைக்கான விதை, அவரது ஆழ் மனதில் நீண்ட வருடங்களாகவே இருந்து வந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், தன்னுடைய படங்களில், ஆங்காங்கே சில வசனங்களை, அவ்வப்போது பேசியிருக்கிறார். அந்த வசனங்கள் குறித்தும், அவர் உணர்த்திய மற்ற குறிப்புகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.
பழைய பேட்டி.., ( 2008 )
விஜய், த்ரிஷா நடிப்பில், தரணி இயக்கத்தில் குருவி என்ற திரைப்படம் உருவாகியிருந்தது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் கலந்துக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிய அவரிடம், அரசியல் ஆர்வம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு உள்ளது என்றும் கூறாமல், இல்லை என்றும் கூறாமல், மழுப்பலான பதிலை மட்டும் தான் விஜய் கூறியிருப்பார். இதனை அப்போது பார்த்த ரசிகர்கள், அவருக்கு அந்த ஆசையை இருப்பதை, சூசகமாக அப்போதே புரிந்துக் கொண்டனர்.
வேலாயுதம்.. ( 2011 )
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், சூப்பர் ஹீரோ பாணியிலான கதைக் களத்துடன் உருவாகியிருந்த திரைப்படம் தான் வேலாயுதம். இந்த திரைப்படத்தில், வழக்கம் போல் மக்களை காப்பது போல், விஜய் நடித்திருப்பார். ஆனால், அது தற்போது பேசப்பட வேண்டியது கிடையாது.
இதே திரைப்படத்தில், கடவுளிடம் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சி ஒன்று இடம்பெறும். அப்போது வசனம் பேசும் விஜய், “முருகா.. உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு தான் கேக்குறேன்.. என் கட்சி ஜெயிக்கணும்.. அதான் என் தங்கச்சி ஜெயிக்கணும்..” என்று பேசியிருப்பார்.
இந்த காட்சிக்கும், வசனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இருப்பினும், தனது அரசியல் ஆர்வத்தை உணர்த்த, இந்த காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும்.
அரசியல் நெருக்கடி..
இந்த இடம் தான் ரொம்ப த்ரில்லிங்கான இடம் என்று செந்தில் பேசுவது போல், விஜய் அரசியலை தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய அங்கமாக இந்த காலகட்டம் தான் இருந்துள்ளது என்று கூறலாம். அதாவது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், வழக்கமான கேங்ஸ்டர் கதையில் விஜய் நடித்திருந்தார்.
தலைவா.. Time To Lead என்ற வாசகத்துடன், இந்த திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த வாசகத்திற்காகவே, இப்படம் பெரும் சவாலை சந்தித்ததாக கூறப்பட்டது. இதனால், தமிழ்நாட்டை தவிர, மற்ற மாநிலங்களில் ஆகஸ்டு ஆகஸ்டு 9 ஆம் தேதியும், தமிழ்நாட்டில் 21-ஆம் தேதியும் ரிலீஸ் ஆனது.
தலைவா என்ற தலைப்பின் காரணத்தினாலே, பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாக்கப்பட்ட விஜய், அன்றில் இருந்துதான், அரசியலில் இறங்க வேண்டும் என்ற முடிவை, மிகவும் தீர்க்கமாக எடுத்தார் என்று கூறப்படுகிறது.
புலி… ( 2015 )
தலைவா பட பிரச்சனையில் இருந்து வெளியே வந்த பிறகு, குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையிலான ஃபேண்டஸி திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார். சிம்புதேவன் இயக்கியிருந்த இப்படம், காமெடி கைக் கொடுத்த அளவுக்கு, திரைக்கதை கைக் கொடுக்காததால், தோல்வி அடைந்தது.
இருப்பினும், இந்த திரைப்படத்திலும், தனது அரசியலுக்கான ஆர்வத்தை, மிகவும் ஆணித்தரமாக காட்டியிருப்பார். அதாவது, புலிபடத்தின் இடைவேளை காட்சியின்போது, ஹன்சிகாவை விஜய் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றியிருப்பார்.
அப்போது, சுதீப் தனது படை வீரர்களுடன் வந்து, யார் என்னவென்று, விசாரிப்பார். இறுதியில், வாருங்கள் நம்முடைய கோட்டை போகலாம் என்று சுதீப் கூறுவார். அதற்கு விஜய், “நீங்க கூப்பிடலனாலும் நானே கோட்டைக்கு வந்துடுவேன்” என்று வசனம் பேசியிருப்பார்.
முற்றம்.. ( 2018, 2019, 2024 )
இவ்வாறு தனது படங்களில், மறைமுகமாகவே அரசியல் ஆர்வத்தை காட்டி வந்த நிலையில், 2018-ஆம் ஆண்டில் இருந்து வெளிப்படையாகவே பேசினார். அதாவது, 2017-ஆம் ஆண்டு வந்த மெர்சல், 2018-ஆம் ஆண்டு வந்த சர்க்கார் ஆகிய படங்களில், எதிர்கட்சிகளை வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.
மேலும், அந்தந்த படங்களின் இசை வெளியீட்டு விழாவிலும், இந்த விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இதனால், மீண்டும் அரசியல் அழுத்தங்களுக்கு ஆளான விஜய், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, கொஞ்சம் அடக்கி தான் வாசித்தார்.
இதனை பார்த்த சிலர், அவர் அடங்கினார் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது அரசியல் கட்சியே தொடங்கி, அடுத்த கட்டத்திற்கு அவர் நகர்ந்துவிட்டார். இப்படி, பல்வேறு படங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களையும், அதன் மீதான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்திய விஜய், சமீபத்தில் வெளியான, விசில் போடு படத்தில் இடம்பெற்ற பாடலிலும் இதை காண்பித்திருப்பார்.
“பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா? கேம்பனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?” என்று வரிகள் வெளிப்படையாகவே இடம்பெற்றிருக்கும். இவ்வாறு பல்வேறு படிநிலைகளை கடந்து, இந்த நிலைக்கும் வந்திருக்கும் விஜய், சினிமாவை போன்ற அரசியலில் ஜொலிப்பாரா? அல்லது வீழ்வாரா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..,