கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் நடித்திருந்த இந்த திரைப்படத்தை, பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.
சில தரப்பில் இருந்து கலவையான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்றபோதிலும், வசூலில் நல்ல லாபத்தை பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பா.ரஞ்சித் அடுத்த படம் என்னவென்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.
அதாவது, நடிகர் சூர்யாவை வைத்து, தனது கனவு படமான ஜெர்மன் -ஐ பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, அட்டகத்தி தினேஷை வைத்து, கேங்ஸ்டர் படம் ஒன்றை, பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இவ்வாறு இரண்டுவிதமான தகவல் பரவி வரும் நிலையில், பா.ரஞ்சித்திடம் அவரது அடுத்த படம் குறித்து, சமீபத்திய நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை, விரைவில் நானே அறிவிப்பேன். சிறிது நாட்கள் மட்டும் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பெரிய நடிகரின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அவரை வைத்து, மிகவும் பிரம்மாண்டமான படத்தை எடுக்கலாம் என்று ஞானவேல் ராஜா கூறியதாகவும், பா.ரஞ்சித் தங்கலான் மேடையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.