“யார் அந்த சார்?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி ஞானசேகரன் என்பவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு நபர் குறித்து, விசாரணை நடத்தப்பட்ட வருகிறது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும்,

தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News