மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதலமைச்சர் யார் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பாரதிய ஜனதா கட்சி 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகயுள்ளது. இதேபோல் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா 57 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்தித்த மகாயுதி கூட்டணி தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் யார் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் யார் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் தனித்தனியாக நேற்று (நவ.24) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் பதவிக்கு ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், ஃபாட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக கூடும் எனவும், பெரும்பாலும் ஃபாட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஷிண்டே, அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு சிவசேனாவுக்கு கூடுதலாக உள்துறை பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருவதாகவும், பெரும்பாலான முக்கிய இலாக்காக்களை பாஜக தன்வசம் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.