இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்று அப்பல்லோ. இந்த மருத்துவ நிறுவனம், உலகத்தின் புற்றுநோய் தலைநகரம் எது என்று, ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது, இந்தியாவில் உள்ள மக்களின் ஒட்டுமொத்த உடல்நலம் குறைந்து வருகிறது என்றும், புற்றுநோய் மற்றும் மற்ற-பரவா நோய்களின் பாதிப்பு, அதிகரித்து வருகிறது என்றும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 3-ல் ஒரு இந்தியருக்கு சர்க்கரை நோயும், 3-ல் 2 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 10-ல் ஒருவர் மன அழுத்தத்தாலும், பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, புற்றுநோய், நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான நோய்கள், மிகவும் பரவலாக இருந்து வருகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள், 1.57 மில்லியன் அளவில், புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு, மார்பகம், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோய்களும், ஆண்களுக்கு, நுரையீரல், வாய் சார்ந்த புற்றுநோய்களும், அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், அதிகபட்ச அதிர்ச்சி அளிக்கும் தகவல்களில் ஒன்றாக, நுரையீரல் புற்றுநோயில் பாதிக்கும் நபர்களின் வயது, சீனாவில் 68-ஆகவும், அமெரிக்காவில் 70-ஆகவும், UK-வில் 75-ஆகவும் உள்ளது. ஆனால், இந்தியாவில் 59-ல் வயதிலேயே, பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
வருடந்தோறும், ஒரு மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இதில், 4 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், புற்றுநோயில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்திய மருத்துவத்துறையில் இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வு, “உலகத்தின் புற்றுநோய் தலைநகரம் இந்தியா” என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளது. இதனை சரி செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்று, மருத்துவத்துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.