2,390 ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

ஆப்ரேஷன் மின்னல் என்ற பெயரில் கைதான 2 ஆயிரத்து 390 ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத
சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அறிக்கையில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்ரேஷன் மின்னல் என்ற பெயரில் 3 ஆயிரத்து 905 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பலர் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும், காவல்துறை தலைவர் அறிக்கை வெளியிட்ட நாளிலேயே, ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி-யின் பூர்வீக வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக, ஈபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதான ரவுடிகளில் 2 ஆயிரத்து 390 பேரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிவிட்டு சுதந்திரமாக உலவ விட்டதன் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.