ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளன. ஒடிசாவைப் பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்-க்கு நெருக்கமானவருமான விகே பாண்டியனை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பூரி ஜெகநாதர் கோவிலில் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போய்விட்டது. அந்த சாவி தற்போது தமிழகத்தில் இருப்பதாக சிகே பாண்டியனை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழர் ஆளலாமா மாநில அரசை ஒரு தமிழர் வழிநடத்தலாமா? என பேசினார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக நிர்வாகியான சிடிஆர் நிர்மல்குமார்,”தமிழ் பெண் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருக்கும்போது, ஒரு இந்தியர் இங்கிலாந்து ஆளும்போது, ஏன் ஒரு தமிழன் ஒடிசாவை ஆளக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல திமுகவினர் பலரும்,”ஒரிசாவை தமிழன் ஆளலாமா? என்று பேசி மாநில உணர்வுகளை தூண்டி விட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார் அமித் ஷா, அவருக்கு வரலாறு தெரியாது. இன்றைய ஒரிசா அன்றைய கலிங்கத்தை ஆண்ட சோழன் என்கிற தமிழன்.. அதற்கு சான்றாக இன்றளவும் கலிங்கத்துப்பரணி காவிய இலக்கணம் உள்ளது என கூறியுள்ளனர்.