முதலிரவுக்கு காத்திருந்த கணவன் – மனைவி கொடுத்த ‘ஹார்ட் அட்டாக்’!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில். 48 வயதாகும் இவர், லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு, இவரது மனைவி உயிரிழந்த நிலையில், தனது ஒரே மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த செந்தில், ஜோடி ஆப் என்ற திருமண செயலியில், தனது விவரங்களை பதிவேற்றியுள்ளார். இவரது Profile-ஐ பார்த்த கவிதா என்ற பெண், தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தன்னுடைய கணவரும் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.

ஆண் துணை இல்லாததால், இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கவிதா பேசியுள்ளார். இதையடுத்து, செந்திலும், கவிதாவும், தினமும் செல்போனில் பேசி, பழகி வந்துள்ளனர். சில சமயங்களில், செலவுக்கு பணம் வேண்டும் என்று செந்திலிடம் கேட்டுள்ளார்.

திருமணம் செய்துக் கொள்ள போகிற பெண் என்பதால், செந்திலும் பணத்தை வழங்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, கடந்த ஜூன் 24-ஆம் தேதி அன்று, இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அன்று இரவு முதலிரவுக்கான ஏற்பாடுகளை, செந்தில் கவனித்து வந்துள்ளார். ஆனால், அன்றைய நாள் வீட்டில் இருந்த இரண்டரை லட்சம் பணம், 4 சவரன் தங்க நகையை திருடிக் கொண்டு, கவிதா மாயமாகியுள்ளார்.

இதையடுத்து, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அதற்குள் கவிதா தரப்பில் இருந்து 2 பேர் வக்கீல்கள் என்று சொல்லி வந்துள்ளனர்.. வீட்டில் கொள்ளை அடித்து சென்ற, நகை, பணத்தை கவிதாவை வைத்து திரும்ப ஒப்படைப்பதாக செந்திலிடம் சொன்னார்கள்.. ஆனால், இதுவரை நகை, பணம் என எதுவுமே வரவில்லை. மீண்டும் ஏமாந்துவிட்டோம் என்பதை அறிந்த செந்தில், இந்த முறை நேரடியாக மாவட்ட கண்காணிப்பாளரிடமே புகார் அளித்துள்ளார்.