நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்புகேசவன். 38 வயதான இவருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும், ரோஹித், அப்சனா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜம்புகேசவன், கடந்த 8 ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
கணவர் துணையின்றி குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்த மகேஸ்வரி, மகனை தனது தங்கையின் வீட்டில் விட்டுவிட்டு, மகளை மட்டும் தன்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தங்கை அமுதா வீட்டில் வந்து பார்த்தபோது, மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
மேலும், வீட்டின் மற்றொரு பகுதியில் சிறுமி அப்சனா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகேஸ்வரி மற்றும் அப்சனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார், அக்கம் பக்கத்தினர் இடையே விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வாடகை செலுத்தவே முடியாமல் தவித்து வந்ததால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று மகேஸ்வரி கூறியதாக, அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.