திருப்பூர் மாவட்டம் செந்தில் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். 43 வயதாகும் இவர், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ரவிக்குமார் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அன்று, வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்த ரவிக்குமார், அதில் கிடைத்த பணத்தில் 4 ஆயிரம் ரூபாயை, மது அருந்த செலவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி, தோசைக் கரண்டியால் தனது கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பிறகு, அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்துவிட்டார் என்று கூறி, மருத்துவமனைக்கு ஜோதிமணி அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, கதறி அழுது நாடகமாடிய அவர், உடல் நலப்பிரச்சனையால் தான் உயிரிழந்தார் என்று உறவினர்களை நம்ப வைத்துள்ளார். ஆனால், இறுதிசடங்கு நடத்தும்போது, முகத்தில் இருந்த காயத்தை பார்த்த உறவினர்கள், ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நடந்தவற்றை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.