சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்தபோதிலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தை பார்வையிடுவதற்கும், பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கும், அவர் அங்கு செல்வதாக கூறப்பட்டது.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என்று, அரசியல் விமர்சகர்கள் பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இன்று, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற மறுசீரமைப்பு, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு போன்ற மக்கள் பிரச்சனை குறித்து பேசவே, அமித்ஷாவை சந்தித்ததாக கூறினார்.
மேலும், கூட்டணி குறித்து ஏதாவது பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே, அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு.
தேர்தலுக்கான காலம் இன்னும் இருக்கிறது. தேர்தலுக்கு ஒராண்டுக்கு முன்பு, கூட்டணி குறித்து பேசுவதற்கான எந்த ஒரு அவசியமும் இல்லை. கூட்டணி என்பது சந்தர்ப சூழலுக்கு ஏற்ப மாறும். தேர்தலின்போது என்ன சூழ்நிலை உள்ளதோ, அதற்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.