ஆந்திரா, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா? காங்கிரஸ் கேள்வி!

ஆந்திரா, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மோடியின் மூன்றாவது அரசு மத்தியில் அமைய உள்ளது. ஆனால் இது இம்முறை மோடியின் மூன்றில் ஒரு பங்கு அரசாகத்தான் இருக்கும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று கடந்த 2014 ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதியில் பிரதமர் மோடி கூறினார்.

10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார். இதனை அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன. தற்போது அம்முயற்சி நிறுத்தப்படுமா?

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என 2014 தேர்தலில் மோடி கூறினார். 10 ஆண்டுகளாக இதற்கான கோரிக்கை எழுந்தாலும் பிரதமர் மவுனம் கலைக்கவில்லை. இந்த வாக்குறுதியை பிரதமர் இப்போது நிறைவேற்றுவாரா?

பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய மகா கூட்டணி அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதற்கு நிதிஷ் குமாரும் ஆதரவு தெரிவித்தார். பிஹாரை போல் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி இப்போது உறுதி அளிப்பாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News