வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும் இதனால் மழையும் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நாளை (டிச.13) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவுப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்.1-ம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 47 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 40 செ.மீ. இது இயல்பைவிட 16% அதிகம்.
வியாழக்கிழமை பகல் 2 மணி வரையில் பதிவான மழை நிலவரப்படி, நெற்குன்றத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 8 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 செ.மீ, தரமணியில் 7 செ.மீ, பூந்தமல்லியில் 6 செ.மீ, நந்தனத்தில் 6 செ.மீ, கொளப்பாக்கம் 5 செ.மீ, டெல்டா மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை பெய்யும்போது பனிப்பொழி இருக்காது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் இயல்பால், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அது ஒரு வலு குறைந்த அமைப்பு என்பதால் அதில் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதன் காரணமாக, ஏற்ற இறக்கத்துடன் மழைப்பொழிவு இருந்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும். இதனால், மழையும் குறையும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் மேக கூட்டங்கள் மொத்தமாகவே தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது. வரும் டிச.15-ம் தேதியை ஒட்டி, அந்தமான் கடற்பகுதியை ஒட்டி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் நகர்வு, அதனால், ஏற்படக்கூடிய மழை குறித்த விவரங்கள் கண்காணித்து பின்னர் தெரிவிக்கப்படும்” என்றார்.