குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் பால்தேவ் சாகத்யா. இவர், 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதனால், அந்த 16 வயது பெண், கர்ப்பம் தரித்திருந்தார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் தாய், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், சிறுமியின் அத்தையின் உதவியுடன் தான், பால்தேவ், சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிறுமியும், சிறுமியின் தாயும், சாட்சியத்தை மாற்றிக் கூறினர்.
அதாவது, “பால்தேவ் சாகத்யாவை நான் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டேன். அதனால் தான் கர்ப்பம் அடைந்தேன். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை” என்று அந்த சிறுமி கூறினார்.
இதேபோல், சிறுமியின் தாயாரும், இதற்கு ஆதரவாக பேசியிருந்தார். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையிலும், டி.என்.ஏ பரிசோதனையின் அடிப்படையிலும், இது பாலியல் வன்கொடுமை தான் என்பதையும், இதனை பால்தேவ் தான் செய்துள்ளார் என்பதையும், அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபித்திருந்தார்.
சாட்சியத்தை சிறுமி மற்றும் அவரது தாய் மாற்றிக் கூறியதால், நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, பால்தேவ் சாகத்யாவுக்கும், அவருக்கு உதவி செய்த சிறுமியின அத்தைக்கும் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அந்த சிறுமியின் தாய் மீது, குற்ற வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.