ஆந்திரா மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாருதி நாயக். லாரி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு, கவிதா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கவிதாவிற்கும், மாருதி நாயக்கின் நண்பர் வினோத் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது மகள் மற்றும் 3 மகன்களில் ஒருவரை தன்னுடன் அழைத்து சென்ற கவிதா, கள்ளக்காதலன் வினோத்துடன் மாயமாகியுள்ளார். பின்னர், கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வேலு பகுதியில், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும், கள்ளக்காதலனுடனும், கவிதா வசித்து வந்துள்ளார்.
இவ்வாறு இருக்க, சில நாட்கள் கழித்து கவிதா வசிக்கும் இருப்பிடத்தை அறிந்த அவரது கணவர், கவிதா வீட்டிற்குச் சென்று தனது மகள் எங்கே என கேட்டுள்ளார். அதற்கு கவிதா முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த மாருதி நாயக், போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், கவிதாவை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, கடந்த ஒரு வாரமாக, அப்பா வேண்டும் என்று மகள் அழுதுக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த நானும், வினோத்தும், குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டோம்.
பின்னர், அவளது உடலை, வீட்டின் முன்பு புதைத்துவிட்டோம் என்று கவிதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பிந்துவின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.