கணவனை கொன்றுவிட்டு.. அந்த உடலோடு படுக்கையில் தூங்கிய மனைவி!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் அதுல். மிட்டாய் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவருக்கு, அன்னு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதில், அன்னு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையாக இருந்த அதுல், குடிபோதையில் அடிக்கடி தொந்தரவு செய்வது வழக்கம்.

இந்நிலையில், சம்பவத்தன்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு, மனைவியிடம் அதுல் தகராறு செய்துள்ளார். இதனால், கடும் கோபமடைந்த அவரது மனைவி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலுடனே, படுக்கையில் தூங்கியுள்ளார். காலையில் குழந்தைகள் எழுந்ததும், தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, இரவு வீட்டிற்கு வந்த அன்னு, வழக்கம்போல் உணவு சமைத்துவிட்டு, குழந்தைகளுக்கு பரிமாறியுள்ளார். குழந்தைகள் தூங்கிய பிறகு, கணவரது உடலை தனி ஆளாக தூக்கிக்கொண்டு, வீட்டின் வாசலில் வீசியுள்ளார்.

அடுத்த நாள் விடிந்ததும், மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் எனக் கூறி, கதறி அழுதுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அன்னுவிடம் விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.